அரசுப் பணியாளர் அவமதிப்பு: பாஜக அமைச்சருக்கு ஒருமாதச் சிறை

அரசுப் பணியாளர் அவமதிப்பு: பாஜக அமைச்சருக்கு ஒருமாதச் சிறை

கோப்புப் படம்: என்டிடிவி

28 Apr 2026 - 6:39 pm

1 mins read

மும்பை: அரசுப் பணியாளரை அவமதித்த வழக்கில் பாஜக மாநில அமைச்சர் நிதேஷ் ராணே குற்றவாளி என மகாராஷ்டிர நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

அரசுப் பணியாளர் மீது சேற்றை வாரியிறைத்து அவமதித்தார் என்பது நிதேஷ் மீதான குற்றச்சாட்டாகும். கடந்த 2019ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

அப்போது காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவாக இருந்தார் நிதேஷ் ராணே. அச்சமயம், மும்பை-கோவா நெடுஞ்சாலையில் நடைபெற்றுவந்த விரிவாக்கப் பணியை ஆய்வு செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உட்கோட்ட பொறியாளர் பிரகாஷ் ஷெடேகர் என்பவரைச் சந்தித்தார்.

ஆய்வின்போது சாலைப்பணிகள் மோசமான தரத்தில் இருந்ததாகவும் இதனால் நிதேஷ் கோபமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் அதிகாரி பிரகாஷ்மீது அங்கிருந்த சேற்று நீரைக் கொட்டி அனைவரது முன்னிலையிலும் அவரைச் சகதியில் கட்டாயப்படுத்தி நடக்கவைத்ததாகவும் தெரிகிறது.

பல்வேறு தரப்பினரும் இதற்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், நிதேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவானது. நிதேஷ் தற்போது பாஜக சார்பில் மகாராஷ்டிர மாநில அமைச்சராக உள்ளார்.

பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில், தற்போது சிந்துதுர்க் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மோசமான சாலைப்பணியைச் சுட்டிக்காட்டுவதே நிதேஷ் ராணேவின் நோக்கம் என்றாலும் பொதுவெளியில் அரசுப் பணியாளரை அவமதித்தது தவறு என்றும் எனவே நிதேஷ் ராணேவுக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்