திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் நகராட்சி, பஞ்சாயத்து தேர்தல்களில் இரு பிள்ளைக்குமேல் பெற்றுக்கொண்டோரை மட்டும் போட்டியிட அனுமதிக்கும் புதிய சட்டத்தைச் செயல்படுத்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார்.
இரு குழந்தைகளுக்குமேல் பெற்றுக்கொண்டோரை உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடத் தடை விதிக்கும் சட்டம் அம்மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அமலில் இருந்தது.
இந்தப் பழைமையான சட்டத்தை சில மாதங்களுக்குமுன் ஆந்திர அரசு நீக்கியது. அதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு தனது சொந்த ஊரான திருப்பதிக்கு அருகிலுள்ள நரவாரிப்பள்ளி கிராமத்தில் ஜனவரி 14ஆம் தேதி தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் ‘சங்கராந்தி’ பண்டிகையைக் கொண்டாடியபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
வயதான மக்கள்தொகை தொடர்புடைய பிரச்சினைகளைச் சமாளிக்க அதிக குழந்தைகளைத் தெலுங்கு பேசும் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கடந்த பத்து ஆண்டுகளாக மக்களிடம் எடுத்துரைத்துவரும் அவர், அதிக பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து கடந்த ஆண்டு பேசினார்.

