புதுடெல்லி: அமெரிக்காவில் எச்-1பி விசா அடிப்படையில் பணிபுரியும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்படுவதால் 60 நாள்களுக்குள் வேறு வேலை தேடிக்கொள்ளாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் சிலிக்கான் வேலியை உலுக்கிவரும் அடுத்தடுத்த பணிநீக்க அலைகள், அங்குள்ள இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
குறிப்பாக, ‘மெட்டா’ நிறுவனம் தனது முதலீடுகளைச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பக்கம் திருப்பி உள்ளது. இந்நிலையில், கிட்டத்தட்ட 8,000 ஊழியர்களை திடீரெனப் பணிநீக்கம் செய்துள்ள விவகாரம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பணிபுரியும் பெரும்பாலான இந்தியர்கள் எச்-1பி விசாவை நம்பியே உள்ளனர். தற்போதைய அமெரிக்க விதிகளின்படி, வேலையிழந்த 60 நாள்களுக்குள் புதிய நிறுவனத்தில் விசாவுடன் வேலையைக் கண்டறிய வேண்டும்; தவறினால் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்து வரும் சூழலில், இரண்டு மாதங்களுக்குள் புதிய வேலை தேடுவது இந்திய ஊழியர்களுக்கு மிகக் கடுமையான சவாலாக மாறியுள்ளது.
கால அவகாசத்தை நீட்டிக்க பல ஊழியர்கள் தற்காலிகமாக ‘சுற்றுப்பயண விசா’வுக்கு (பி-2 விசா) மாற முயன்றாலும், தற்போதைய அமெரிக்க குடிநுழைவுத் துறை இந்த விண்ணப்பங்களை மிகக் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தி வருகிறது.
இதனால், அங்குப் பல ஆண்டுகளாக வீடு வாங்கி, குடும்பத்துடன் வசித்து வரும் இந்தியர்கள், தங்களின் ‘கிரீன் கார்டு’ கனவு கலைந்து ஒரே இரவில் தாயகம் திரும்ப வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர் விசா அலைக்கழிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் வேலைவாய்ப்பு மாற்றங்கள் காரணமாக, அமெரிக்காவில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட இந்திய நிபுணர்கள் மீண்டும் இந்தியாவுக்கே திரும்புவது அல்லது கனடா, ஐரோப்பா போன்ற வட்டாரங்களுக்குச் செல்வது பற்றி ஆலோசித்து வருகின்றனர்.

