போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள கல்லூரியில் தேர்வுத்தாள்களை கடைநிலை ஊழியர் திருத்தியதால் சர்ச்சை எழுந்தது.
நர்மதாபுரம் மாவட்டம், பிபரியா என்ற இடத்தில் பகத் சிங் அரசு கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் தேர்வு விடைத்தாள்களை கடைநிலை ஊழியர் ஒருவர் திருத்தும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதனால் மாணவர்களிடையே பெரும் சர்ச்சைக் கிளம்பியது.
இதுகுறித்து விசாரித்த அமைச்சர் விஷ்வாஸ் சாரங், “கல்லூரி முதல்வர் ராகேஷ் வர்மா, விடைத்தாள் திருத்தும் பணிக்கான பொறுப்பு அதிகாரி ராம்குலம் படேல் ஆகிய இருவரும் தற்பொழுது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்யப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
கல்லூரி முதல்வர் ராகேஷ் வர்மா கூறுகையில், “விடைத்தாள் திருத்தும் பணியை பேராசிரியர் ஒருவரிடம் கொடுத்தோம். அவர் அப்பணியை கடைநிலை ஊழியரிடம் கொடுத்தார் என்பது எனக்குத் தெரியாது. அதனால் எனது இடைநீக்கம் உத்தரவை திரும்பப் பெறவேண்டும் எனக் கோரி உயர்கல்வித் துறைக்கு கடிதம் எழுதியுள்ளேன்,” என்று கூறினார்.