புதுடெல்லி: இந்திய முன்னாள் ராணுவத் தளபதி நரவனே எழுதியுள்ள சுயசரிதைப் புத்தகம், சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவின் லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக, முன்னாள் ராணுவத் தளபதி நரவனே எழுதியுள்ள புத்தகத்தில் உள்ள சில தகவல்களை மேற்கோள் காட்டி அவர் பேசியதற்கு பாஜக எம்பிக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
திரு நரவனே எழுதிய ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ என்ற அவரது சுயசரிதை நூலில், லடாக் மோதல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் உள்ள லடாக் மோதல் தொடர்பான தகவலை, மேற்கோள் காட்டி மக்களவையில் பேச முயன்றார் ராகுல் காந்தி.
ஆனால், அந்த நூலை வெளியிட தற்காப்பு அமைச்சு இதுவரை அனுமதி வழங்காததால் மக்களவையில் அதில் உள்ள தகவல்களை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடியை விமர்சிக்கக்கூடாது என பாஜகவினர் வாதிட்டனர்.
ஆனால், லடாக் மோதலின்போது பிரதமர் மோடி உரிய முடிவுகளை எடுத்து, தனது பொறுப்பை சரிவர செய்யத் தவறிவிட்டார் என்றும் அப்பொறுப்பை அன்றைய ராணுவத் தலைமைத் தளபதி நரவனே மீது சுமத்திவிட்டார் என்றும் ராகுல் காந்தி கூறினார்.
பிரதமர் மோடி மக்களவைக்கு வந்தால் நரவனே எழுதிய புத்தகத்தின் பிரதி பரிசாக வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி மேலும் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், நரவனேயின் சுயசரிதை நூல் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
பிரபல பெங்குவின் நிறுவனம் இந்த நூலை வெளியிடுவதாக இருந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக வெளியாகாத நிலையில், இந்தப் புத்தகத்தின் அட்டைப்படமும் உள்ளடக்கமும் இணையத்தில் வெளியானது, காவல்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, நரவனே வெளியிட்ட எக்ஸ் பதிவில், எனது நூலை வாங்குவதற்கு இந்த இணைப்பைப் பின்தொடரவும் என்று குறிப்பிட்டுள்ளார். நரவனே பொய் சொல்கிறாரா என்பதே தமது கேள்வி என்றார்.
“முன்னாள் ராணுவத் தளபதியின் புத்தகம் அமேசானில் கிடைக்கிறது. பிரதமருக்கும் இந்திய அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் சில தகவல்களை தமது நூலில் நரவனே வெளியிட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன்,” என்று ராகுல் காந்தி கூறியதாக ஊடகச் செய்தி கூறுகிறது.

