சமையல் எரிவாயு தட்டுப்பாடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

1 mins read
சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்து
b7a6c660-1756-41ce-b756-ac7e0b6152b3
இந்திய அரசு குடிமக்களைத் தவறாக வழிநடத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுவதும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருப்பது புதன்கிழமை (மார்ச் 11) இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

உடனடியாக இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

எனினும், அனுமதி கிடைக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடவே, மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களின் சிரமங்களைப் போக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்பிக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு குறித்து பாஜக அரசு, நாட்டு மக்களிடம் பொய்களை மட்டுமே கூறிவருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் குற்றஞ்சாட்டினார்.

வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளை வழங்க வேண்டாம் என எரிவாயு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாளுக்கு நாள் நிலைமை மோசமடைவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

இந்திய அரசு குடிமக்களைத் தவறாக வழிநடத்துவதாக மற்றொரு காங்கிரஸ் எம்.பி. கே.சுரேஷ் சாடினார்.

சமையல் எரிவாயு உருளை விலை உயர்ந்துள்ளது என்றும் விமானக் கட்டணங்களும் அதிகரித்து வருகின்றன என்றும் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகத் ராய் கூறினார்.

இது மத்திய அரசின் தோல்வி என்று விமர்சித்த அவர், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து சலுகைகள் வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

குறிப்புச் சொற்கள்