புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,400ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூன் 13) ஒரே நாளில் ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டனர்.
தலைநகர் புதுடெல்லி, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை (ஜூன் 13) இரவு வரையிலான முந்திய 24 மணி நேரத்தில் மட்டும் 269 பேருக்குப் புதிதாக கிருமி தொற்றியது.
கர்நாடகாவில் ஒரே நாளில் 132 பேரும் குஜராத்தில் 79, கேரளாவில் 54 பேர், மத்தியப் பிரதேசத்தில் 20, தமிழகத்தில் 12, சிக்கிமில் 11 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ஒன்பது பேர் தொற்று பாதிப்பால் மாண்டுவிட்டனர்.
கடந்த ஜனவரி முதல் தற்போது வரை இந்தியாவில் பதிவான கொரோனா இறப்புகள் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் பொது மக்களைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.