தேசிய கீதத்தைப் பாடும்போது சரியான உச்சரிப்பும் உரையும் அவசியம்: இந்திய அரசு

தேசிய கீதத்தைப் பாடும்போது சரியான உச்சரிப்பும் உரையும் அவசியம்: இந்திய அரசு

2 mins read
eb0dc160-0928-4916-8980-311744b33e04
இந்திய அரசாங்கத்தால் சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வேறு எந்த நிகழ்வுகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்திய தேசிய கீதத்தைப் பாடும்போது சரியான உச்சரிப்பும் உரையும் அவசியம் என அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது.

தனது இணையத்தளத்தில் சரியான உரை, உச்சரிப்பு வழிகாட்டியை வழங்கி உள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியத் தேசிய கீதத்தையும் பாடலையும் இசைக்கும்போதும் பாடும்போதும் சரியான எழுத்து வடிவம் உரை சொல்லமைப்பு, ஒலியமைப்பு ஆகியவற்றைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் இந்திய உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து மாநில ஆளுநர், மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள ஓர் உத்தரவில் தேசிய கீதம், பாடலை இசைப்பது, பாடுவது தொடர்பான விதிகளை அந்த அமைச்சு மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தேசிய கீதத்தையும் பாடலையும் இசைக்க வேண்டிய அல்லது பாடப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் மற்றும் பாடப்படலாம், இசைக்கப்படலாம் எனும் சூழல்கள் அடங்கிய பட்டியலையும் விரிவான தமது புதிய உத்தரவில் இடம்பெறச் செய்வதாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது. அக்குறிப்பிட்ட உத்தரவு ஜூலை 9ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்திய அரசாங்கத்தால் சிறப்பு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வேறு எந்த நிகழ்வுகளில் தேசிய கீதம் இசைக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சில மாநிலங்களில் தேசிய கீதத்துடன் மாநிலப் பாடலும் பாடப்பட்டு இசைக்கப்படுகிறது. தேசிய கீதத்துடன் மாநிலப் பாடல் பாடப்படும்போதெல்லாம், தேசியப்பாடலும் தேசிய கீதமும் ஒன்றாகவே பாடப்பட வேண்டும். முதலில் தேசியப்பாடல் பாடப்பட்டு, அதைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி அரசியலமைப்புச் சபையால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில், ‘ஜன கண மன’ என்று அழைக்கப்படும் பாடல் வரிகளையும் இசையையும் கொண்ட படைப்பானது, சூழ்நிலைக்கேற்ப அரசாங்கம் அங்கீகரிக்கக்கூடிய பாடல் வரி மாற்றங்களுக்கு உட்பட்டு, இந்தியாவின் தேசிய கீதமாகும் என முடிவு செய்யப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதேவேளையில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்காற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல், ‘ஜன கண மன’ பாடலுக்கு இணையாகக் கௌரவிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இணையான மதிப்பைப் பெற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அண்மைக் காலமாக தேசிய கீதம், தேசியப் பாடல், மாநிலப் பாடல் ஆகியவற்றைப் பாடுவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், இந்திய அரசின் இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பாடல்மத்திய அரசுஉத்தரவுஇசைஆளுநர்அலுவலகம்