தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோல்கத்தாவில் துப்பாக்கிக்காரணை விரட்டிப்பிடித்த கவுன்சிலர்

1 mins read
c06f050f-69a0-486e-8848-f1e0c633b6ee
கோல்கத்தாவில் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த கவுன்சிலர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தும் காணொளிக் காட்சி. - படம்: ஊடகம்

கோல்கத்தா: மேற்கு வங்கத்தின் தலைநகரான கோல்கத்தாவில் கஸ்பா என்னும் பகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் சுஷந்தா கோஷ் என்பவர் தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்திருந்த ஆடவர், தன் கால்சட்டைப் பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து சுஷந்தாவைக் குறிவைத்து இரண்டு முறை சுட்டார். ஆனால் அவரது கைத்துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. அதில் இருந்த குணடுகள் வெளிவரவில்லை. அதையடுத்து சுஷந்தா உயிர்தப்பினார்.

உடனடியாக அவர் எழுந்து சென்று, துப்பாக்கிக்காரர்களைப் பிடிக்க ஓடினார். ஆனால், அதற்குள் மோட்டார் சைக்கிளோட்டி தப்பிச் சென்றார். ஆனால் அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தவரை சுஷாந்த் துரத்திச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

ஒருவழியாக துப்பாக்கிக்காரனை கோஷ் பிடித்துவிட்டார். பின்னர் அவரை அடித்து உதைத்து யார் உன்னை அனுப்பியது என்றும் கேட்கும் காட்சி அந்தக் காணொளியில் உள்ளது.

யாரிடமும் பணம் வாங்கிக் கொண்டு இந்த வேலையைச் செய்யவில்லை. ஆனால் தனக்கு ஒரு புகைப்படத்தைக் கொடுத்து, கொலை செய்யும் உத்தரவிடப்பட்டது என்று கூறினார். அதன்பின்பு அவர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் கோல்கத்தாவில் உள்ள கவுன்சிலரைக் கொல்வதற்கு பீகாரில் இருந்து கூலிப்படையை அமர்த்தியது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் உள்ளூர் பிரபலங்கள் பின்னணியில் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்