இஸ்லாமாபாத் - இந்தியாமீது நடத்தப்பட்ட பதில் ராணுவத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் அணுவாயுத கிடங்கைப் பராமரிக்கும் உயர் ராணுவ, சிவில் குழு, எந்தக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யவில்லை என்று பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் சனிக்கிழமை (மே 10) கூறியுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் இதற்குமுன் பிரதமர் கூட்டத்துக்கு அழைப்புவிடுத்ததாகக் கூறியிருந்தது.
“அணுவாயுதப் பயன்பாட்டுக்கான வாய்ப்பு இருந்தாலும் அதுபற்றி பேசத் தேவையில்லை. அந்த நிலையை எட்டும் முன் சினம் தணியும் என்று நினைக்கிறேன். தேசியத் தளபத்திய ஆணையம் எந்தக் கூட்டத்தையும் நடத்தவில்லை. எந்த ஒரு கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யவில்லை,” என்று பாகிஸ்தான் தற்காப்பு அமைச்சர் கவாஜா அஸிஃப் கூறினார்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் டர், உள்ளூர்த் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், “இந்தியா இதோடு நிறுத்திக்கொண்டால் நாங்கள் நிறுத்துவது பற்றி யோசிப்போம்,” என்றார்.
இந்தியா, பாகிஸ்தான் அதிகாரிகள் பேசியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
சனிக்கிழமை இடம்பெற்ற பாகிஸ்தானின் ராணுவத் தாக்குதல் குறித்து பேசிய இந்திய ராணுவம், அனைத்து தாக்குதல்களையும் இடைமறித்து தகுந்த பதில் கொடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது.
இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்குப் பதிலடியாக வட இந்தியாவில் உள்ள ஏவுகணை கிடங்கு உள்ளிட்ட பல தளங்களைக் பாகிஸ்தான் குறிவைத்ததாகச் சொன்னது.
உதம்பூர், பத்தன்கோட், அதம்பூர், புஜ் பகுதிகளில் உள்ள ஆகாயப் படை நிலையங்களின் கருவிகளும் அங்கிருந்தோரும் சிறியளவில் பாதிக்கப்பட்டதாக இந்தியா குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தனது மூன்று ஆகாயத் தளங்களை நோக்கி இந்தியா ஏவுகணையைப் பாய்ச்சியதாகப் பாகிஸ்தான் சொன்ன சில மணி நேரங்களில் பாகிஸ்தான் தனது தளங்களை ஏவுகணைகைக் கொண்டு குறிவைத்ததாக இந்தியா குறைகூறியது.
பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் எஸ்-400 ரக தற்காப்புக் கட்டமைப்பை அழித்துவிட்டதாகக் கூறியது. புதுடெல்லி அதை மறுத்தது. பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரிப்பதாகவும் தூண்டும் செயலில் ஈடுபடுவதாகவும் இந்திய ராணுவம் சாடியது.
பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலுக்கு ‘ஆப்பரேஷன் புன்யனுன் மர்சூஸ்’ என்று பெயரிட்டதாக அந்நாட்டு தகவல் அமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இந்தியாவின் ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய பகுதிகளில் பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகக் கூறப்பட்டது.