வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரைக் கொன்று பெட்டியில் அடைத்த தம்பதி கைது

1 mins read
cb1a9231-e1ce-4df6-adb8-7caabca54f2a
தீப்ஷிகா சர்மாவின் உடலை மீட்ட காவல்துறை குப்தா தம்பதியைக் கைது செய்துள்ளது. - படங்கள்: என்டிடிவி

காஸியாபாத்: டெல்லிக்கு அருகே உள்ள காஸியாபாத் நகரில் வாடகை பாக்கியைத் தரும்படி கேட்ட வீட்டு உரிமையாளரை வெட்டிக் கொன்றதாக ஒரு தம்பதியைக் காவல்துறை கைது செய்துள்ளது.

வீட்டு உரிமையாளரான 48 வயது தீப்ஷிகா சர்மா ஆசிரியையாகப் பணிபுரிகிறார். அவரது உடலை வீட்டிலிருந்த பெட்டியிலிருந்து மீட்ட காவல்துறை இதன் தொடர்பில் அஜய் குப்தா, அக்ரிதி குப்தா தம்பதியைக் கைது செய்துள்ளது.

தீப்‌ஷிகாவுக்கும் அவரது கணவர் உமேஷ் சர்மாவுக்கும் இரு அடுக்குமாடி வீடுகள் இருந்ததாகவும் அவற்றில் ஒன்றில் குடியிருக்கும் அத்தம்பதி மற்றொரு வீட்டை குப்தா தம்பதிக்கு வாடகைக்கு விட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

குப்தா தம்பதி நான்கு மாதங்களாக வாடகைப் பணத்தைக் கொடுக்காததால் புதன்கிழமை (டிசம்பர் 17) அவர்கள் வீட்டுக்குச் சென்று வாடகை பாக்கியைத் தரும்படி தீப்ஷிகா கேட்டதாகத் தெரிகிறது. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் தீப்ஷிகாவின் இல்லப் பணிப்பெண் அவரைத் தேடத் தொடங்கினார். குப்தா தம்பதியின் பதில்கள் சந்தேகம் எழுப்பவே வீட்டின் கண்காணிப்பு கேமராப் பதிவுகளை அவர் சோதித்தார்.

அதில், அந்த வீட்டிற்குள் சென்ற தீப்ஷிகா அங்கிருந்து வெளியேறவில்லை எனத் தெரிய வரவே காவல்துறைக்குத் தகவல் தரப்பட்டது.

அதிகாரிகளின் சோதனையில் தீப்ஷிகாவின் உடல், பெட்டி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது. தலையில் தாக்கப்பட்ட பின்னர் அவரது கழுத்து நெரிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்