சூரத்: துபாயிலிருந்து 28 கிலோ தங்கத்தை உடலில் மறைத்து, கடத்தி வந்த குஜராத் தம்பதியை சூரத் விமான நிலையக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
துபாயிலிருந்து ஏர் இந்தியா ஐஎக்ஸ்-174 விமானம் மூலம் சூரத் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய தம்பதிமீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவர்களை மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர்.
அப்போது, அவர்களின் உடலில் மொத்தம் 28 கிலோ தங்கத்தைப் பசை வடிவத்தில் மறைத்துக் கொண்டுவந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஆணிடமிருந்து 12 கிலோ தங்கத்தையும் பெண்ணிடமிருந்து 16 கிலோ தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அத்தம்பதியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரத் விமான நிலைய வரலாற்றில் இதுவே மிகப்பெரிய தங்கக் கடத்தலாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, சென்னையில் இருசக்கர வாகனத்தில் சென்ற நகை வியாபாரி ஒருவர் திடீரென மயங்கியபோது, அவருக்கு உதவுவது போல நடித்து, 1.2 கிலோ தங்கக் கட்டிகளை திருடிய ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் கைதுசெய்து செய்யப்பட்டுள்ளனர்.