ஹைதராபாத்: ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியர் பல முதலீட்டாளர்களிடம் இருந்து பலகோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாகக் காவல்துறை சந்தேகிக்கிறது.
அத்தம்பதியர் மூன்று வாரங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்திற்குச் சுற்றுலா சென்ற நிலையில் அங்கு இருவரும் மாயமாகிவிட்டனர்.
51 வயதான தொழிலதிபர் பப்பா சந்திரசேகர், அவரது மனைவியான 42 வயதான ஸ்வப்னா ஆகிய இருவரும் ஜூன் 22ஆம் தேதி சுவிட்சர்லாந்து சென்றனர்.
தொடக்கத்தில் தங்களது குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்த இருவரும் ஜூலை 8ஆம் தேதிக்குப் பிறகு யாரையும் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை.
இருவரது கைப்பேசிகளும் தொடர்புகொள்ள முடியாதவாறு வைக்கப்பட்டுள்ளன. இதனால் கவலையடைந்த அத்தம்பதியிரின் 23 வயது மகள் ஸ்ரேயா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மாயமான சந்திரசேகர் பலரிடம் கவர்ச்சிகரமான அம்சங்களைக் கூறி ரூ.50 கோடி வரை பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சந்திரசேகர் தம்பதியினரின் பயணத்திட்டம், குடிநுழைவுப் பதிவுகள், நிதி பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களைக் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
காவல்துறை சார்பாக இதுவரை மோசடி, உள்ளிட்ட எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை.
சந்திரசேகர் தம்பதியர் உண்மையாகவே சுவிட்சர்லாந்தில் இருக்கிறார்களா அல்லது தன்னிச்சையாக மாயமாகிவிட்டனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

