டேராடூன்: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் குளிர் தாங்க முடியாமல் தீமூட்டி குளிர் காய்ந்த தம்பதியர், தூங்கச் சென்ற பின்னர் மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இச்சம்பவம் பிலங்கனா பகுதியின் துவாரி-தப்லா கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்தது.
தம்பதியரான மதன் மோகன் செம்வால் (52), அவரது மனைவி யசோதா தேவி (48) ஆகியோர் ஒரு திருமண விழாவிற்காக அங்கு வந்திருந்ததாக துவாரி-தப்லா கிராம நிர்வாகி ரிங்கி தேவி கூறியதாக என்டிடிவி ஊடகத் தகவல் தெரிவித்தது.
இரவு 11 மணியளவில் குளிர் காரணமாக கூண்டு போன்ற அடுப்பு ஒன்றில் தீமூட்டி குளிர் காய்ந்தனர். பின்னர், அந்த அடுப்பை தங்கள் அறைக்குள் எடுத்துச்சென்று வைத்துவிட்டு கதவை மூடிக் கொண்டு தூங்கினர்.
வெள்ளிக்கிழமை காலை, அவர்களின் மகன் அவர்களை எழுப்பச் சென்றபோது, யாரும் கதவைத் திறக்கவில்லை என்று ரிங்கி தேவி கூறினார்.
சிறிது நேரமாகியும் எந்தப் பதிலும் வராமல், கதவும் திறக்கப்படாததால் உள்ளூர்வாசிகள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தம்பதியர் படுக்கையில் இறந்து கிடந்தனர் என்று திருமதி தேவி மேலும் கூறினார்.
தீப்புகையால் உருவான கார்பன் மோனாக்சைடு வாயுவால் அவர்கள் இறந்ததாக அவர் கூறினார்.
ஆனால், அப்பகுதியினர் இந்தச் சம்பவம் குறித்து காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. தம்பதியின் மகன் மற்றும் மகளிடம் பேசிவிட்டு, அங்குள்ள ஒரு ‘காட்’ பகுதியில் உடல்களை தகனம் செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
செம்வால், சரஸ்வதிசேன் என்ற அரசுக் கல்லூரியில் ஒரு எழுத்தராகப் பணிபுரிந்து வந்ததாக கிராம நிர்வாகி ரிங்கி தேவி மேலும் தெரிவித்தார்.

