கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில், வயதைக் குறைத்து இளம் தோற்றத்தைப் பெறமுடியும் என்று 20க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டனர்.
கான்பூரின் கித்வாய் நகரில் ‘ரிவைவல் வோர்ல்டு’ என்ற சிகிச்சை நிலையத்தை ஒரு தம்பதியர் நடத்தி வந்தனர்.
அவர்கள், அந்தப் பகுதியைச் சேர்ந்த வயது மூத்தோரிடம் கான்பூரில் காற்றுத் தூய்மைக்கேடு அதிகரித்திருப்பதால் அதிகமானோர் வயதானவர்கள் போல் இருப்பதாகக் கூறினர்.
இஸ்ரேலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காலப்பொறி மூலம் பிராணவாயு சிகிச்சையைச் செய்தால் இளமைத் தோற்றத்தைப் பெற முடியும் என்று அவர்கள் கூறினர்.
மேலும், ஒரு முறை பிராணவாயு சிகிச்சை செய்வதற்கான கட்டணம் ரூ.90 ஆயிரம் என்றும் நண்பர்களைப் பரிந்துரை செய்தால் சலுகைகள் வழங்கப்படும் என்றும் அவர்கள் விளம்பரப்படுத்தியிருந்தனர்.
இதனை நம்பி சிலர் சிகிச்சை பெற்றனர். ஆனால், நினைத்ததைப் போல எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், தாங்கள் ஏமாந்துவிட்டதை உணர்ந்த சிலர் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில், அந்தத் தம்பதியர் தலைமறைவாகி விட்டனர்.
இதுவரை 20க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.35 கோடி வரை அவர்கள் மோசடி செய்துள்ளனர். அவர்களைப் பிடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவரும் காவல்துறை, அவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிவிடாமல் இருக்க விமான நிலைய அதிகாரிகளிடமும் அது குறித்து தகவல் தெரிவித்துள்ளது.