பெங்களூரு: கன்னட மொழி குறித்து கமல் பேசியது கன்னட மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது என்றும் இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கர்நாடக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கன்னட மொழி குறித்து தாம் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்றும் எந்த வகையிலும் கன்னட மொழியை தாழ்த்திப் பேசவில்லை என்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என்று கூறியிருந்தார்.
இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து, கமல் நடித்த புதுப்படத்தை வெளியிட தடை விதித்து சில கன்னட அமைப்புகள் அறிவிப்பு வெளியிட்டன.
இதனால் தனது பட வெளியீட்டுக்கு பாதுகாப்பு வழங்க, கர்நாடக காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கன்னட மொழி குறித்துப் பேச கமல் என்ன வரலாற்று ஆய்வாளரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், கமல் பேச்சால் கன்னட மக்களின் மனம் புண்படுகிறது என்றும் மன்னிப்பு கேட்டால்தான் அவரது மனு பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
“நீர், நிலம், மொழி குறித்து மக்களுக்கு பற்று உள்ளது. மொழி முக்கியம். கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது எனக் கூற கமல் வரலாற்று ஆய்வாளரா?
“இன்றைய பதற்றமான நிலைக்கு கமல்தான் காரணம். ஆனால் அவர் மன்னிப்பு கேட்காமல் அலட்சியம் காட்டுகிறார். பிரச்சினையை உருவாக்கிவிட்டு பாதுகாப்பு கேட்கிறார். கமல் பொது நபர். அவர் மன்னிப்பு கேட்கவில்லை, தாம் சொன்னது சரி என்கிறார்,” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே, கன்னட மொழியைச் சிறுமைப்படுத்தும் எண்ணம் தமக்கு இல்லை என கமல்ஹாசன் கூறினார்.
“கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட மக்களின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நாம் அனைவரும் ஒன்று, ஒரே குடும்பம் என்பதைதான் என் கருத்தின் மூலம் வெளிப்படுத்த நினைத்தேன்.
“நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தொனியில்தான் பேசினேன். சினிமா என்பது மக்களை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டுமே தவிர பிரிப்பதாக இருக்கக் கூடாது.
“இந்தத் தவறான புரிதல் தற்காலிகமானதுதான் என நம்புகிறேன். அனைத்து இந்திய மொழிகளுக்காகவும் நான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்,” என்று கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

