தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராகுலுக்கு நீதிமன்ற அழைப்பாணை

1 mins read
23876280-de61-4408-9f94-945021bbf49a
இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

சம்பால்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கு சம்பால் நகரில் உள்ள நீதிமன்றம் ஒன்று அழைப்பாணை அனுப்பியுள்ளது.

“நமது போராட்டம் பாரதிய ஜனதா கட்சிக்கோ (பாஜக) ஆர்எஸ்எஸ் அமைப்புக்கோ எதிரானது அல்ல, இந்திய தேசத்துக்கு எதிரானதே” என்று ராகுல் வெளியிட்டிருந்த கருத்துகளுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி தனக்கு எதிரான புகாருக்குப் பதிலளிக்கவேண்டும் அல்லது நீதிமன்றத்தில் முன்னிலையாகவேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றம், புகாரை ஏற்றுக்கொண்டு ராகுலுக்கு அழைப்பாணை விடுத்ததாக வழக்கறிஞர் சச்சின் கோயல் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியன்று, ‘இந்திரா பவன்’ எனும் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகத்தைத் திறந்துவைக்கும்போது ராகுல், பாஜகவைத் தாக்கிப் பேசினார். அப்போது அவர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை என்றும் இந்திய தேசத்தையே எதிர்த்துப் போராடுகின்றன என்றும் சாடினார்.

“அரசியல் அமைப்பான பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக நாங்கள் போராடுவதாக நீங்கள் எண்ணினால் நடப்பது உங்களுக்குப் புரியவில்லை என்று அர்த்தம். பாஜக, ஆர்எஸ்எஸ் இரண்டும் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு துறையையும் தங்கள் வசம் கொண்டுவந்துவிட்டன. இப்போது நாம் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகியவற்றுடன் ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் எதிர்த்துப் போராடுகிறோம்,” என்று ராகுல் கூறியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்