வெட்டப்பட்ட 700 மரங்களுக்கு ஈடாக 7,000 மரங்களை நட்டு, பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

வெட்டப்பட்ட 700 மரங்களுக்கு ஈடாக 7,000 மரங்களை நட்டு, பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு

1 mins read
ba39703a-3741-4f27-b278-bd68c3b6eb9b
போபால் அருகே பர்கேடா நாது பகுதியில் (நீல்பத் அருகில்) அமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்ட அனைத்துலக விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக, தற்சமயம் ஒரு புதிய கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டு வருகிறது. - படம்: ஐஎன்ஐ டிசைன் ஸ்டூடியோ

போபால்: போபாலில் புதிய கிரிக்கெட் மைதானத்திற்கு சாலை அமைக்க 700 மரங்கள்வரை வெட்டப்பட்டதற்கு இழப்பீடாக செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் 7,000 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச வனத்துறைக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

போபாலில் உள்ள ‘போஜ்’ ஈரநிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மைதான கட்டுமான நடவடிக்கைகள் தொடர்பான வழக்கை நீதிபதி ஷிவோகுமார் சிங், நிபுணத்துவ உறுப்பினர் சுதிர் குமார் சதுர்வேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மரக்கன்றுகள் நடும் பணி சடங்காக மட்டுமின்றி, உண்மையான ஈடுசெய்யும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். நட்ட மரக்கன்றுகள் தழைத்து வரும் விகிதம் 100 விழுக்காடாக இருப்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் கண்டிப்புடன் தெரிவித்தது.

அரச மரம், புளிய மரம், ஆல மரம் போன்ற குறிப்பிட்ட மர வகைகளை நடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இத்திட்டம் தொடர்பான புகைப்படங்கள், நடவடிக்கை அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிதி ஒதுக்கீடு, நிலப் பற்றாக்குறை காரணமாகவே வெட்டப்பட்ட மரங்களுக்கு மாற்று மரம் நடும் பணியை முழுமையாக முடிக்க முடியவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்த போதிலும், நிலுவையில் உள்ள தொகையைப் பயன்படுத்தி செப்டம்பர் 30க்குள் பணிகளை விரைந்து முடிக்க தீர்ப்பாயம் கெடு விதித்துள்ளது.

‘அப்பர் லேக்’ நீர் பிடிப்புப் பகுதியில் அமையவுள்ள இத்திட்டத்திற்கான அனுமதி நடைமுறைகள், மரங்கள் அழிக்கப்பட்டது குறித்த பிற புகார்களையும் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்