பாட்னா: பிரதமர் நரேந்திர மோடியின் மறைந்த தாயாரின் படத்தை வைத்துச் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் ஒரு காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.
அதைப் பீகார் காங்கிரஸ் கட்சி சமூக ஊடகத்தில் வெளியிட்டது.
அந்தக் காணொளியில் பிரதமர் மோடி தூங்கும்போது, அவரது கனவில் வரும் தாய் ஹீராபென் மோடி, பணமதிப்பிழப்பு உள்ளிட்ட விவகாரங்களைக் குறிப்பிட்டு பிரதமர் மோடியைத் திட்டுவது போலச் சித்திரிக்கப்பட்டிருந்தது.
அந்தக் காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அது சமூக ஊடகங்களில் பல மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியைப் பாஜக கடுமையாக விமர்சித்தது. மேலும், காங்கிரஸ் கட்சிமீது பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த ஏஐ காணொளியை அனைத்துச் சமூக ஊடகத் தளங்களிலிருந்தும் நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்தக் காணொளியின் பரவலைத் தடுக்க அனைத்துச் சமூக வலைத்தள ஊடகங்களுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து பேசிய தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் சித்தார்த் பிரசாத், “அந்தக் காணொளியை உடனடியாகத் திரும்பப் பெற உத்தரவிட்ட நீதிமன்றம், ராகுல் காந்தி, ஃபேஸ்புக், எக்ஸ் (டுவிட்டர்) மற்றும் கூகல் நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது” என்று தெரிவித்தார்.