திருச்சி: திருச்சி அருகே பட்டியல் இனத்தவரின் நில அபகரிப்பு புகாரில் நடவடிக்கை எடுக்காத இரண்டு காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வசிக்கும் காந்தி (பட்டியல் இனம்) என்பவர், தனது தாத்தாவுக்கு அரசு வழங்கிய 82 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து 2021ல் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்போதைய மணப்பாறை துணை காவல் கண்காணிப்பாளா் ஜனனிபிரியா, காவல் உதவி ஆய்வாளா் சூர்யா ஆகியோர், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல், இதை நிலப் பிரச்சினை என்று கூறி நீதிமன்றத்தை அணுகுமாறு திருப்பி அனுப்பினர்.
இந்த வழக்கில் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவா்கள் இருவரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்கை உயா்நீதிமன்றம் ரத்து செய்து திருச்சி நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, தற்போது வேறு மாவட்டங்களில் பணியாற்றும் ஜனனிபிரியா, சூர்யா ஆகிய இருவர் மீதும் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

