அகமதாபாத்: மாட்டுச்சாணம் பூசப்பட்ட வீடு, அணுக்கதிர்வீச்சால் பாதிக்கப்படாது என்பது அறிவியல்பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருக்கிறார் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர்.
தாப்பி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியான சமீர் வியாஸ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியபோது தெரிவித்த இக்கருத்து இப்போதுதான் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் இருந்து மராட்டிய மாநிலத்திற்குப் பசுக்களையும் எருதுகளையும் கொண்டுசென்ற வழக்கில், 22 வயது இளையர் ஒருவருக்கு நீதிபதி சமீர் வாழ்நாள் சிறையும் ரூ.5 லட்சம் (S$8,075) அபராதமும் விதித்தார்.
பசுக்கள் கொல்லப்படுவது குறித்து மனக்குறைப்பட்டுக்கொண்ட அவர், பசு ஒரு விலங்கு மட்டுமன்று, அது நமது தாய் என்றும் குறிப்பிட்டதாக 'என்டிடிவி' செய்தி கூறுகிறது.
"பசுவின் துளி இரத்தம் நிலத்தில் வீழ்வது நின்றுவிட்டால் இவ்வுலகில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்," என்று திரு சமீர் கூறியுள்ளார்.
"பசுவை மையமாகக் கொண்ட இயற்கை வேளாண்மையின்மூலம் விளைவிக்கப்படும் உணவுப்பொருள்கள் பல நோய்களிலிருந்து நம்மை விடுவிக்கின்றன. பசுஞ்சாணம் பூசப்படும் வீடுகளை அணுக்கதிர்வீச்சு தாக்குவதில்லை என்பதையும் பசுவின் கோமியம் தீர்க்க முடியாத நோய்களையும் தீர்க்கவல்லது என்பதையும் அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது," என்றார் அவர்.

