தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்கப் புதிய முயற்சி

இந்திய மாநிலத்தில் வாகன எரிபொருளாக மாட்டுச் சாணம்

2 mins read
c1a1c738-092d-4226-8206-2aa18f50a6c8
சுத்திகரிக்கப்பட்ட பிறகு காரில் பயன்படுத்தப்படும் எரிபொருளைக் கொண்டு ஏறக்குறைய 5,500 கிலோமீட்டர் வரை செல்லமுடியும். - இபிஏ

லக்னோ: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலப் பொருளியலுக்குப் புதிய ஊக்கம் கிடைத்திருக்கிறது.

பொருளியலுக்கு மாட்டுச் சாணத்திலிருந்து பெறப்படும் எரிவாயு கைகொடுக்கவுள்ளது.

வாகனங்கள் நெடுந்தொலைவு செல்வதற்கு மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் எரிபொருள் பயன்படுத்தப்படவிருக்கிறது.

ஒரு மாட்டின் சாணத்திலிருந்து ஓராண்டில் 225 லிட்டர் பெட்ரோலுக்கு நிகரான மீத்தேன் வாயுவைத் தயாரிக்கலாம்.

சுத்திகரிப்பு முறையின் மூலம் கிடைக்கும் அழுத்தப்பட்ட உயிர்-எரிவாயுவைப் பயன்படுத்தி ஒரு காரால் சுமார் 5,500 கிலோமீட்டர் வரை செல்லமுடியும் என்று கூறப்பட்டது.

மாட்டுச் சாணத்திலிருந்து எரிவாயுவை உற்பத்தி செய்வதன் மூலம் கிராமப்புறங்களில் புதிய வேலைகள் உருவாகும் என்றும் அவை பசுமைப் பொருளியலுக்கு வலுச்சேர்க்கும் என்றும் வல்லுநர்கள் நம்புகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் கோ-சேவா-ஆயோக் அமைப்பின் தலைவர் ‌ஷியாம் பிஹாரி குப்தா, வெளிப்புறங்களில் சுற்றித்திரியும் மாடுகளிடமிருந்து அன்றாடம் சராசரியாக 5.4 மில்லியன் கிலோகிராம் சாணம் பெறப்படுவதாகக் கூறினார்.

ஆலைகளில் பதப்படுத்தப்படும் அத்தகைய சாணம், பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. மீத்தேன் வாயு, சமையல் எரிவாயு முதலியவை அதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

சிறிய தொழில்துறை நிறுவனங்களில் வெப்பமூட்டும் எரிவாயுவாகவும் இயற்கைப் பண்ணைகளில் உரமாகவும் சாணம் பயன்படுகிறது. இவற்றின் மூலம் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான ரூபாய் வருமானம் ஈட்டமுடியும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்காலத்தில் பண்ணைகளில் படிம எரிபொருளுக்கு மாற்றாக மீத்தேன் வாயு உருவாகக்கூடும் என்று அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

மாட்டுச் சாணத்திலிருந்து பெறப்படும் மீத்தேன், இயற்கை எரிவாயுவின் ஒரு வடிவமே என்று குறிப்பிட்ட அமைப்பு, அது சுற்றுப்புறத்துக்கும் பொருளியலுக்கும் சாதகமாக அமையும் என்றது.

குறிப்புச் சொற்கள்