காதலர்களுக்கு கிடுக்கிப்பிடி: வருகிறது புதுச் சட்டம்

1 mins read
ce2cb3d9-914f-4ab0-9b24-bdbfa1e06138
பெற்றோர் சம்மதத்துடன்தான் காதல் திருமணம் செய்ய முடியும் என்ற சட்டத்தை குஜராத் அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: இந்தியா ஃவைலிங்க்ஸ்

அகமதாபாத்: எதிர்ப்பு கிளம்பும்போது காதலர்கள் வீட்டை விட்டு ஓட்டம்பிடிப்பதும் ரகசிய திருமணம் செய்வதும் வழக்கம்தான். ஆனால், இனி இத்தகைய திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் அவசியம் எனும் அவசரச் சட்டத்தை குஜராத் மாநில அரசு விரைவில் கொண்டுவர உள்ளதாக வெளியான ஒரு தகவல் அரசியல், சமூக வட்டாரங்களில் புது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் காதல் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலர் பெற்றோர் சம்மதிக்காவிட்டால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்கின்றனர். ஆனால், இத்தகைய திருமணங்கள் பெரும்பாலும் பிரச்சினைகளில்தான் முடிவடைகின்றன. இதனால் விவாகரத்து, உயிரை மாய்த்துக்கொள்வது ஆகியவை அதிகரித்துவிட்டன.

இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன்தான் காதல் திருமணம் செய்ய முடியும் என்ற சட்டத்தை குஜராத் அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு இந்தச் சட்டம் குஜராத்தில் முன்மொழியப்பட்டது என்றும் விரைவில் அமலுக்கு வரும் என்றும் சமூக ஊடகத்தில் பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த அவசரச் சட்டத்துக்கு குஜராத் மாநில பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை வீட்டை விட்டு வெளியேறி, திருமணம் செய்ய முடிவெடுத்து காவல்துறையை அணுகினால், சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட முகவரிக்கு முறையான அறிவிப்பு அனுப்பினால் அதற்கு பெற்றோர் பதிலளிக்க ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் புதுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்