குற்றவாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்றம்

குற்றவாளிகளிடம் அச்சத்தை ஏற்படுத்துங்கள்: உச்ச நீதிமன்றம்

கோப்புப்படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

05 Oct 2026 - 6:43 pm

2 mins read

புதுடெல்லி: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது.

டெல்லியில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் சுயமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, டெல்லி காவல்துறையினருக்கு நீதிபதிகள் மிகக் கடுமையான அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.

நீதிபதிகள் ஜே.பி.பார்தி வாலா, கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, அவை நடக்காமல் தடுப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

டெல்லியில் இரவு 10 மணிக்கு ஒரு பெண் மெட்ரோ ரயிலிலோ, பேருந்திலோ அல்லது சாலையிலோ நடந்து செல்லும்போது முற்றிலும் பாதுகாப்பாக உணரும் நிலை உருவாக வேண்டும் என்றும் அதற்கு காவல்துறை சட்டத்தை இன்னும் தீவிரமாகவும் கடுமையான முறையிலும் நடைமுறைப்படுத்தத் தயங்கக் கூடாது என்றும் நீதிபதிகள் அழுத்தமாகக் குறிப்பிட்டனர்.

“தவறு செய்ய நினைக்கும் ஒருவரின் மனத்தில் கடுமையான அச்சத்தை காவல்துறை உருவாக்க வேண்டும். ‘இனிமேல் தவறு செய்தால் தப்பவே முடியாது’ என்ற பயம் குற்றவாளிகளுக்குள் வராத வரை இதுபோன்ற கொடூரமான குற்றங்களைத் தடுக்க முடியாது. காகித அளவில் மட்டுமே சட்ட திட்டங்களை வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை; களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்,” என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள் கல்லூரிப் பகுதிகள் போன்ற பொது இடங்களில் தீவிர கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது சட்டம் ஒழுங்கின் வீழ்ச்சியையே காட்டுகிறது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே காவல்துறைக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால் என்றும் சுட்டிக்காட்டினர்.

குறிப்புச் சொற்கள்
உச்ச நீதிமன்றம்டெல்லிபெண்கள்குற்றம்காவல்துறை