புதுடெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மிகப்பெரிய செயலை வெற்றிகரமாகச் செய்து முடித்திருப்பதாகப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல என்றும் அது மக்களின் வாழ்க்கையாக மாறியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அண்மையில் மும்பையில் நடைபெற்ற அனைத்துலக மகளிர் கிரிக்கெட் உலகக்கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வென்று வாகை சூடியது இந்திய அணி.
இதையடுத்து மகளிர் அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளும் அவர்களுடைய பயிற்சியாளர்களும் பிரதமர் மோடியைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது உலகக் கிண்ணத்தை அவரிடம் அளித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
“கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மொத்த நாடும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் கிரிக்கெட்டில் தோல்வியடைந்தால், நாடே அதிர்ச்சிக்குள்ளாகிறது,” என்றார் பிரதமர் மோடி.
இதையடுத்து, உலகக் கிண்ணப் போட்டியில் தொடரின் நாயகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தீப்தி சர்மாவிடம், ‘நீங்கள் கடவுள் அனுமன் உருவத்தைப் பச்சைக் குத்தியுள்ளீர்களே, அது எவ்வாறு உங்களுக்கு உதவியது?’ என்று திரு மோடி கேட்டார்.
அதற்கு, தன்னைவிட கடவுள் அனுமன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அதுவே தன்னுடைய விளையாட்டுத் திறமையை மேம்படுத்தியதாகவும் பதிலளித்தார் தீப்தி.
மற்றொரு வீராங்கனையான ஹர்லின் தியோல், பிரதமரின் முகப்பொலிவுக்கு என்ன காரணம் என்று கேட்க, அதைப் பற்றி தாம் அதிகம் யோசிப்பதில்லை என்றார் பிரதமர் மோடி.
தொடர்புடைய செய்திகள்
அவரது பதிலால் சிரிப்பலை எழுந்தது.
இந்திய மகளிர் அணியினர் அடுத்து அதிபர் திரௌபதி முர்முவைச் சந்திக்க இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

