கிரிக்கெட்: நுழைவுச்சீட்டு வாங்கும்போது தள்ளுமுள்ளு; தண்ணீரைப் பீய்ச்சியடித்த காவல்துறை

1 mins read
இந்தியா - இங்கிலாந்து போட்டியைப் பார்க்க ரசிகர்கள் பேரார்வம்
339fb3ff-87b7-4314-900a-b554f7557164
நுழைவுச்சீட்டு வாங்க முண்டியடித்த ரசிகர் கூட்டம். - படம்: ஒடிசா டிவி

கட்டாக்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக முண்டியடித்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டு, பலர் காயமடைந்தனர்.

இம்மாதம் 9ஆம் தேதி ஒடிசா மாநிலம், கட்டாக்கில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

அதற்கான இணையவழி நுழைவுச்சீட்டு விற்பனை கடந்த 2ஆம் தேதியே தொடங்கிவிட்டது. நேரடி விற்பனை 5, 6ஆம் தேதிகளில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நுழைவுச்சீட்டு விற்பனை புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 9 மணிக்குத் தொடங்கியது. ஆயினும், செவ்வாய்க்கிழமை மாலையே ரசிகர்கள் பாராபதி அரங்கின்முன் திரண்டனர். சிலர் இரவில் அங்கேயே உறங்கினர்.

ஏராளமானோர் திரண்டதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது. நான்கு, ஐந்து பேரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று என ரசிகர் ஒருவர் கூறியதாக ஒடிசா டிவி செய்தி கூறியது.

விளையாட்டரங்க நிர்வாகம் உரிய ஏற்பாடுகளையும் வசதிகளையும் செய்யாததே இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

“குடிநீர் வசதிகூட இல்லை. சிலரை மருத்துவமனையில் அனுமதிக்க நேர்ந்தும்கூட குடிநீர் வழங்கப்படவில்லை,” என்று ரசிகர் ஒருவர் ஆதங்கப்பட்டார்.

உரிய நுழைவுவழிகளும் வெளியேறும் வழிகளும் இல்லாததே முக்கியப் பிரச்சினை எனக் கூறப்பட்டது.

தகவலறிந்து அங்கு திரண்ட காவல்துறையினர், மூங்கில் தடுப்பை வெட்டி அகற்றி, அவசரகால வெளியேற்ற வழியை ஏற்படுத்தித் தந்தனர்.

இதனிடையே, நுழைவுச்சீட்டு வாங்கும்போது ரசிகர்கள் அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்து, ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்படி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்