33 ஆண்டுகளுக்குமுன் செய்த குற்றம்: 84 வயதில் தண்டனை

33 ஆண்டுகளுக்குமுன் செய்த குற்றம்: 84 வயதில் தண்டனை

1 mins read
4f4bba87-d083-4e67-808d-29622ac00f39
கடந்த 1992ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம் தொடர்பாக தீப் ராய் மீது வழக்குப் பதிவானது.  - படம்: ஒடிசா டிவி

பாட்னா: தமது 51வது வயதில் செய்த குற்றத்துக்காக 84 வயது முதியவர் ஒருவருக்கு இந்தியாவின் பீகார் மாநில நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

சட்டம் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக ஒருதரப்பினரும் தள்ளாத வயதில் தண்டனையா என மற்றொரு தரப்பினரும் சமூக ஊடகங்களில் விவாதத்தைத் தொடங்கியுள்ளனர்.

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், கடந்த 1992ஆம் ஆண்டு மே 10ஆம் தேதி நிகழ்ந்த ஒரு வன்முறைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவானது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல் நடத்தினர் என்பதுதான் புகார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய உள்ளூர் காவல்துறையினர் ஓராண்டுக்குப் பின் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் நடந்துவந்த நிலையில், குற்றச்சாட்டை எதிர்நோக்கிய ஐவரில் நால்வர் அடுத்தடுத்து பல காரணங்களால் உயிரிழந்துவிட்டனர்.

எஞ்சிய ஒரே ஒருவரான தீப் ராய் என்பவர் மட்டுமே தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்தார். இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி, தீப் ராய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்துள்ளார். தீப் ராய்க்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நடந்தபோது 51 வயதாக இருந்த தீப் ராய்க்குத் தற்போது 84 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக மற்றவர்கள் துணையின்றி அவரால் நடக்கக்கூட முடிவதில்லை.

குறிப்புச் சொற்கள்