புதுடெல்லி: இந்தியாவில் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதன் தொடர்பில் புள்ளிவிவரங்களுடன் அக்கட்சி எக்ஸ் ஊடகத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
அதில், “நாட்டில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக 2020ல் 50,291 வழக்குகளும், 2021ல் 50,900 வழக்குகளும், 2022ல் 57,582 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
“அதுபோல, பழங்குடியினருக்கு எதிராக நடந்த குற்றங்கள் தொடர்பாக 2020ல் 8,272 வழக்குகளும், 2021ல் 8,802 வழக்குகளும், 2022ல், 10,064 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ‘தலித் விரோத’ மனநிலைக்கு இந்தப் புள்ளிவிவரங்களே சான்று. பட்டியலின, பழங்குடிச் சமூகம் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் மரியாதைக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகிறது,” என்று காங்கிரஸ் சாடியுள்ளது.