மதுரையில் 2025ல் குற்றங்கள் குறைவு: ஆணையர் ஜே. லோகநாதன்

2 mins read
77964203-4dea-4bd2-a3bf-ba56a2946958
17 எல்லைச் சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருந்ததால் வெளியூரிலிருந்து குற்றவாளிகள் நகருக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. - படம்: சமயம்

மதுரை: காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் மதுரையில் குற்றச் செயல்கள் மிகவும் குறைந்துள்ளதாக மதுரை காவல் ஆணையர் ஜே.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாநகரில் 2025ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் 2024ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் பெருமளவில் குறைந்துள்ளன. காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளே இதற்குக் காரணம்.

குற்றச் சம்பவங்கள் குறைந்ததைப் பற்றி மதுரை காவல் ஆணையர் ஜே.லோகநாதன் குறிப்பிடுகையில், “2024ல் 37ஆக இருந்த கொலை வழக்குகளின் எண்ணிக்கை, 2025ல் 21ஆக குறைந்துள்ளது. இது 43 விழுக்காடு சரிவாகும்.

“2024ல் 67ஆக இருந்த கொலை முயற்சி வழக்குகள், 2025ல் 28ஆக குறைந்துள்ளன.

“நகரில் கொள்ளைச் சம்பவங்கள் 74 விழுக்காடு வரை வியக்கத்தக்க வகையில் குறைந்துள்ளன.

“கடுமையான காயம் ஏற்படுத்தும் குற்றங்களும் 43 விழுக்காடு குறைந்துள்ளன.

“தீவிரச் சுற்றுக்காவல் பணியில் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த 63 இரு சக்கர வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

“ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கும் ஒரு ‘டெல்டா’ வாகனம், பிரத்யேகமாக 7 பிங்க் சுற்றுக்காவல் வாகனங்கள் நியமிக்கப்பட்டு பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.

“சமூக விரோதிகள், ரவுடிகள், போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பவர்களைக் கண்காணிக்க, ‘ஈகிள்’ வாகனங்கள் 24 மணி நேரமும் இயக்கப்பட்டன.

“நகரின் 17 எல்லைச் சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருந்ததால், வெளியிலிருந்து குற்றவாளிகள் நகருக்குள் நுழைவது தடுக்கப்பட்டது. சிறப்புப் படையினரின் உதவியுடன், 87 குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

“நீதிமன்ற பிடியாணைகளை விரைவாக நிறைவேற்றியதன் மூலம், 11 முக்கிய வழக்குகளில் தொடர்புடைய 25 குற்றப் பின்னணி கொண்ட நபர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்