புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் (டிஎம்சி) தலைவருமான மம்தா பானர்ஜியின் கோல்கத்தா இல்லத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினர் (சிஐடி) காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார். இதையடுத்து, ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாகப் பலரை அவர் கட்சியைவிட்டு நீக்க நேர்ந்தது.
இந்நிலையில், மேற்கு வங்க சட்டமன்ற நாயகரிடம் திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக அளிக்கப்பட்ட ஆவணம் ஒன்றில் பல எம்எல்ஏக்களின் கையெழுத்துகள் போலியானவை என்று புகார் எழுந்துள்ளது.
மம்தாவால் நீக்கப்பட்டவர்களின் கையெழுத்து அந்த ஆவணத்தில் இடம்பெற்றதே குற்றச்சாட்டு எழ முக்கியக் காரணமாகும்.
இந்தப் புகார் தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக, மேற்கு வங்க குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள், கோல்கத்தாவின் காளிகாட் பகுதியில் உள்ள மம்தா பானர்ஜியின் இல்லத்திலும் கட்சித் தலைமையகத்திலும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) மாலை சோதனையிட்டனர்.
முதலில் கட்சித் தலைமையகத்தில் நுழைய முயன்றபோது அங்கிருந்த திரிணாமூல் நிர்வாகிகள் காவல்துறையினரைத் தடுத்து நிறுத்தி, எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சிஐடி அதிகாரிகள் மம்தா வீட்டுக்குள் நுழைந்து, சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதேபோல், கட்சியின் முக்கிய நிர்வாகியான அபிஷேக் பானர்ஜியின் கோல்கத்தா வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் இம்முறை 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், அந்த எம்எல்ஏக்களில் பலரும் மம்தாவுக்கு எதிராக அணிவகுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், போலிக் கையெழுத்து தொடர்பாக மேற்கு வங்கக் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, ஐவர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

