மும்பை: உலகின் மூன்றாவது ஆகப்பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையைக் கொண்ட இந்தியாவில், அதன் முன்னணி நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ இரண்டும் தொடர் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன.
அந்நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு விமானச் சேவையில் 90 விழுக்காட்டை அந்நிறுவனங்களே வகிக்கின்றன.
அண்மையில் தாய்லாந்தின் புக்கெட்டிலிருந்து புதுடெல்லி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென ஓரிரு நொடிகளில் ஏறக்குறைய 91 மீட்டர் கீழே இறங்கியதால் 17 பேர் காயமடைந்தனர்.
அந்த விமானத்தின் தலைமை விமானி போதைப்பொருள் பரிசோதனையில் சிக்கியதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா தனது அனைத்து விமானிகளுக்கும் பரிசோதனை நடத்த உத்தரவிட்டது.
2025ஆம் ஆண்டு லண்டன் சென்ற போயிங் 787 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 241 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகு, ஏர் இந்தியா மீதான கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.
அண்மைய தணிக்கையில், ஏர் இந்தியா நிறுவனத்திடம் கிட்டத்தட்ட 100 பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
பாதுகாப்புக் குறைபாடுகள் ஒருபுறமிருக்க, நிதி நெருக்கடியும் அந்த விமான நிறுவனங்களை முடக்கியுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதால் நீண்ட தூரச் சுற்றமைப்புப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயமும் மத்திய கிழக்குப் போர் காரணமாக அதிகரித்த எரிபொருள் விலையும் நிறுவனங்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளன.
நடப்பு நிதியாண்டில் இந்திய விமான நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டாலர் (5.09 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இண்டிகோ நிறுவனம் தனது அகலமான உடல் அமைப்பைக் கொண்ட பெரிய ரக விமானச் சேவைகளை நிறுத்தியுள்ளதுடன், ஏர் இந்தியா தனது 500 புதிய விமானங்களின் விநியோகத்தைத் தள்ளிவைக்க யோசித்து வருகிறது.
விமானத் துறையின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்பக் கட்டமைப்புகளும் தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளும் மேம்படாததே இந்நிலைக்குக் காரணம் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவ்விரு நிறுவனங்களின் ஆதிக்கம், விமானப் போக்குவரத்துத் துறையின் கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இருபது ஆண்டுகளில் ஏழு முக்கிய விமான நிறுவனங்கள் முடங்கியுள்ளன அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளன; அதன் காரணமாக, சந்தையில் எஞ்சியுள்ள இரு பெரிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அல்லது தண்டனை விதிப்பது கட்டுப்பாட்டு அமைப்பிற்குச் சிரமமாக மாறியுள்ளது.
இதனிடையே, விமான நிலையங்களை நிர்வகிப்பவர்கள் விமான நிறுவனங்களின் உரிமையாளர்களாக இருப்பதைத் தடுக்கும் விதிகளில் தளர்வுகளைக் கொண்டுவர அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம், அதானி குழுமம் போன்ற பெருநிறுவனங்கள் இத்துறைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகலாம் என்றும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


