மும்பை: பிரதமர் மோடியை சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சித்த காரணத்தால், மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் பகாரேவை பாஜகவினர் சேலை அணியவைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
73 வயதான பிரகாஷ் பகாரே அண்மையில் சமூக ஊடகத்தில் பிரதமர் மோடி குறித்து பதிவிட்டது பாஜகவினரின் கோபத்தைத் தூண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கல்யாண் பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த அவரை மடக்கிப்பிடித்த பாஜகவினர், சேலை அணியுமாறு கட்டாயப்படுத்தும் காணொளிப்பதிவு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பாஜகவினர் தன்னை மறித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் சேலையை அணிவித்ததாகப் பிரகாஷ் பகாரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டரீதியாகப் போராட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், உள்ளூர் பாஜகவினர் பிரதமர் மோடியை அவமதிக்கும் எத்தகைய செயலையும் ஏற்க இயலாது என்றும் பிரகாஷ் பகாரேவுக்கு விடுக்கப்பட்டது வெறும் எச்சரிக்கை மட்டுமே என்றும் தெரிவித்துள்ளனர்.