புதுடெல்லி: பெண்கள் அணியும் உடைகள் இளையர்களின் ஒழுக்கத்தைக் கெடுக்கும் என்ற வாதம் அபத்தமானது என்றும் ஒருவிதமான ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலை என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பாலியல் தொல்லை தொடர்பான வழக்கு விசாரணையின்போது பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்று நீதிபதி சந்திரசேகரன் சுதா குறிப்பிட்டார்.
அதில் அக்கம்பக்கத்தினரோ சமூகமோ வழக்கறிஞர்களோ தலையிட முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டின்பேரில் கைதான ஒருவர், 2014ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதை எதிர்த்து அரசு தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
நீதிபதி சந்திரசேகரன் சுதா வழக்கை விசாரித்தார். அப்போது பாதிக்கப்பட்ட பெண் அணிந்த ஆடைகள் குறித்தும் விமர்சித்த எதிர்த்தரப்பு வழக்கறிஞர், அந்த உடைகள் ஆண்களின் ஒழுக்கத்தைக் கெடுப்பதாக இருந்தது என்று வாதிட்டார்.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, உடைகள் தொடர்பாக பெண்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்குப் பதிலாக, பெற்றோரும் சமூகமும் தங்கள் பிள்ளைகளுக்குச் சுயக்கட்டுப்பாட்டையும் பிறரின் எல்லைகளை, விருப்பங்களை மதிப்பதையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார்.
பெண்ணின் ஆடை அல்லது வாழ்க்கைமுறை, வழக்கு விசாரணைக்குத் தேவையில்லாத ஒன்று எனக் குறிப்பிட்ட அவர், கீழ்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து குற்றஞ்சாட்டப்பட்ட நபரை இந்தியத் தண்டனைச் சட்டத்தின்கீழ் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார்.


