குஜராத்: சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர உருவச் சிலை, குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
உலகின் மிக உயரமான சிலைகளில் ஒன்றான அங்கீகாரத்தையும் இது பெற்றுள்ளது.
கடந்த 2018-ல் திறக்கப்பட்ட இந்த சிலை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.
இந்நிலையில், நர்மதை ஆற்றங்கரையோரம்அமைந்துள்ள இந்த சிலைக்கு அருகே பஞ்ச்முலி என்ற ஏரி உள்ளது.
இந்த ஏரியில் சுற்றுலா பயணிகளுக்காக படகு சவாரி வசதி செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், இந்த ஏரியில் முதலைகள் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஏரியில் உள்ள முதலைகளை அகற்றி முதலைக் காப்பகங்களுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி, இதுவரை 194 முதலைகள் இந்த ஏரியில் இருந்து அகற்றப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.