திருவந்தனபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவில் 2025-2026ஆம் ஆண்டு மகர விளக்கு விழாக்காலத்தின்போது, சபரிமலை ஐயப்பன் கோவில் பூசாரிகளும் நாள்சம்பளப் பணியாளர்களும் கையூட்டு, முறைகேடுகள் மூலம் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தங்கள் வங்கிக் கணக்குகள் வாயிலாகப் பரிமாற்றம் செய்துள்ளதாக கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலையில் தனலட்சுமி, ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் ஐயப்பன் கோவில் ஊழியர்கள் கணக்கு வைத்துள்ளனர்.
ஐயப்பன் கோவிலில் தங்கம் கொள்ளை போன சம்பவத்துக்குப் பின், சபரிமலையில் நடந்த பல்வேறு முறைகேடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சபரிமலையில் தற்காலிக ஊழியர்கள், பூசாரிகள், உதவிப் பூசாரிகள் ஆகியோர் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் கையூட்டு, முறைகேடுகள் வாயிலாக ஈட்டும் பணத்தை அவ்வப்போது வங்கி வழியாக பலரது கணக்குகளுக்கு அனுப்பியுள்ளதாக நம்பப்படுகிறது.
தற்காலிக ஊழியர்கள், பூசாரிகள் வங்கிக் கணக்குகள் வழி பெருந்தொகை பரிமாற்றம்
2025-2026ஆம் ஆண்டு மகர விளக்கு விழாக்காலத்தில் மட்டும் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ வங்கி வழியாக 1,667 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.8.08 கோடி அனுப்பப்பட்டுள்ளது. தனலட்சுமி வங்கி வழி 942 பரிமாற்றங்கள் மூலம் ரூ.11.45 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது.
மேல் சாந்தி, பூசாரிகள், நாள்சம்பளப் பணியாளர்கள், குத்தகைதாரர்கள் என 18 கணக்குகளில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், தபால் நிலையம் மூலம் ரூ.14.08 லட்சம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் சிலர் நெய் விற்பனை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பக்தர்களின் தரிசனத்துக்கு உதவி செய்து பணம் வாங்குவது பற்றியும் சிலர் லாட்டரி விற்பனை செய்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபரிமலையில் தேவைக்கு அதிகமாக நாள்சம்பளப் பணியாளர்களை நியமிக்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.
சபரிமலையில் நாள்சம்பளப் பணியாளர்கள் நியமனம் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிமன்றம் நியமித்துள்ள தனி அதிகாரி இந்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.

