மும்பை: ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த பயணிகளில் சிலர் கீழே தவறி விழுந்ததில், ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின்போது, மும்ப்ரா ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது என்றும் அதன் காரணமாகப் பயணிகள் பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.
அப்போது திடீரென பயணிகளுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், படிக்கட்டுப் பயணம் மேற்கொண்ட சிலர் தண்டவாளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து காவல்துறையினரும் ரயில்வே நிர்வாகத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்து குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இனி மும்பை புறநகர் ரயில் நிலையத்திற்காக உற்பத்தி செய்யப்படும் அனைத்து ரயில் பெட்டிகளிலும் தானியங்கி கதவுகளின் மூடும் வசதிகள் இருக்கும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து ரயில் பெட்டிகளும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, கதவு மூடும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவம் குறித்து மத்திய ரயில்வே துறையும் விசாரணை நடத்தி வருகிறது.
“ரயிலில் ஏன் சிறிய அளவிலான தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படும். பயணிகள் எந்த ரயிலில் இருந்து கீழே விழுந்தனர் என்றும் எவ்வாறு விபத்து நடந்தது என்றும் உடனடியாகத் தெரியவில்லை,” என்று தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.