ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்: இந்தியா

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்: இந்தியா

100 விழுக்காடு வரி விதிக்​கும் அமெரிக்காவின் முடிவுக்கு பதில்
படம்: பிக்சாபே

18 Sep 2026 - 7:13 pm

1 mins read

புதுடெல்லி: நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வது தொடர்ந்து நடைபெறும் என்று இந்தியா உறுதியாகத் தெரிவித்துள்ளது.

ரஷ்யா, ஈரான் மீது தடைகளை விதிக்கும் புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், 100 விழுக்காடு வரை சுங்க வரி விதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இம்மசோதா விரைவில் அமெரிக்க அதிபரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அவர் கையெழுத்திட்டவுடன் உடனடியாக நடைமுறைக்கு வரும்.

“நாட்டின் 140 கோடி மக்களின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்,” என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்து உள்ளது.

நாட்டின் வர்த்தக, பொருளியல் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது இந்தியாவின் முதன்மை கச்சா எண்ணெய் விநியோகிப்பாளராக ரஷ்யா விளங்குவதோடு, நாட்டின் மொத்த இறக்குமதியில் 51 விழுக்காட்டைப் பூர்த்தி செய்கிறது.

அதேவேளையில், எரிசக்தி கொள்முதலைப் பரவலாக்கும் முயற்சியாக அமெரிக்கா, வெனிசுவேலாவிடமிருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
கச்சா எண்ணெய்ரஷ்யாஅமெரிக்காஈரான்இந்தியா