லே: ஆர்ப்பாட்டங்கள் வெடித்த லடாக் யூனியன் பிரதேசத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து லடாக் சாலைகளில் பாதுகாப்புப் படையினர் சுற்றுக்காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், குறைந்தது 50 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இந்துஸ்டான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. காவல்துறையும் துணை ராணுவப் படைகளும் லடாக் தலைநகர் லேயில் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) ஊரடங்கு விதித்தன.
லேயில் வெடித்த ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டனர், 80க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
லடாக்கிற்கு மாநில உரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து லே ஏப்பெக்ஸ் பிரிவு (எல்ஏபி) என்றழைக்கப்படும் குழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது. அது, வன்முறையாக உருவெடுத்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைப்பு உள்ளிட்ட செயல்களில் புதன்கிழமை (செப்டம்பர் 24) ஈடுபட்டனர்.
முக்கிய நகரங்களில் நால்வர் அல்லது ஐவருக்கு மேல் ஒன்றுகூடக்கூடாது என்ற விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கார்கில் பகுதியும் அவற்றில் அடங்கும். அங்குதான் கார்கில் ஜனநாயகக் கூட்டணி (கேடிஏ), பருவநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்குக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தியது. சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை வழிநடத்தினார்.
“ஊரடங்கு நடப்பில் உள்ள பகுதிகள் இப்போது நன்கு கட்டுப்பாட்டில் உள்ளன. எங்கும் விரும்பத்தகாதச் செயல்கள் இடம்பெற்றதாகத் தகவல் இல்லை,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐ ஊடகத்திடம் தெரிவித்தார். வன்முறையில் ஈடுபட்டதற்காக இரவோடு இரவாக கிட்டத்தட்ட 50 பேர் பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
வன்முறையில் காயமடைந்தோரில் மூவர் நேப்பாளக் குடிமக்கள் என்று அவர் தெரிவித்தார். வன்முறையில் வெளிநாட்டவரின் தலையீடு இருந்ததா என்பதை அறிய காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லடாக்கிற்கு மாநில உரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை விடுத்து எல்டிஏயும் கேடிஏயும் கடந்த நான்கு ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகின்றன. அவ்விரு அமைப்புகளும் மத்திய அரசாங்கத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை வரும் அக்டோபர் மாதம் ஆறாம் தேதி நடைபெறவுள்ளது.