தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணையக் குற்றங்கள், மின்னிலக்க மோசடி: 9 லட்சம் சிம் அட்டைகளை முடக்கிய இந்திய அரசு

1 mins read
e452a7a3-f7bb-43dc-86c0-53f341306ac0
பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களுக்கு சிறப்பு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார் அமைச்சர் சஞ்சய் பண்டி. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இணையக் குற்றங்கள், மின்னிலக்க மோசடி கைது நடவடிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் இத்தகைய முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட 9.42 லட்சம் கைப்பேசி ‘சிம்’ அட்டைகள் முடக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, இத்தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் சஞ்சய் பண்டி குறிப்பிட்டார்.

அனைத்து வகையான இணையக் குற்றங்களை ஒருங்கிணைக்க, இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் ஒரு பகுதியாக தேசிய இணையக் குற்ற புகார் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“அனைத்து வகையான இணையக் குற்றங்களையும் ஒருங்கிணைத்து சமாளிக்க இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் என்ற மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேசிய இணையக் குற்ற புகார் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

“பொதுமக்கள் இணையக் குற்றங்கள் தொடர்பாக புகாரளிக்க, இந்தத் தளத்தைப் பயன்படுத்தலாம். பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்றங்களுக்கு சிறப்பு முன்னுரிமை கொடுக்கப்படும்,” என்றார் அமைச்சர் சஞ்சய் பண்டி.

இணையக் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குற்ற ஒருங்கிணைப்பு மையம், இணையத்தளம் மூலம் குற்றங்களை விரைவாக கண்டறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியும் என்றார்.

இதனிடையே, பயங்கரவாதச் செயல்களுக்கு கைப்பேசி இணைப்புகள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கைப்பேசி இணைப்புகள் முடக்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்