புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவாகியுள்ள அதிதீவிர ‘அக்வான்’ புயல் காரணமாக ஒடிசா மாநில அரசாங்கம் 100,000க்கும் மேற்பட்டோரைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளது. மேலும், மீட்புப் பணிகளுக்காக 74 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இரண்டு லட்சம் பேரை வெளியேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
“வானிலை முன்னுரைப்பைக் கருத்தில்கொண்டு, அரசாங்கம் மக்களை வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது,” என்று வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புதன்கிழமை (நவம்பர் 18) இரவு முதல் மாநிலத்தின் கடலோர, தென்பகுதிகளில் மழை பெய்துவருகிறது. வியாழன், வெள்ளி ஆகிய நாள்களில் விசாகப்பட்டினம், கோராபுட் பகுதிகளுக்கு இடையிலான இரண்டு ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் விழிப்புநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
புயலால் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய கஞ்சாம் மாவட்டத்தில் இருந்து 36,398 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 308 துயர்துடைப்பு முகாம்கள் செயல்படுகின்றன. அங்கு 1,098 கர்ப்பிணிகள் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
‘அக்வான்’ தீவிரப் புயல் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்துவருகிறது. இது நவம்பர் 20ஆம் தேதி மசூலிப்பட்டினத்திற்கும் பூரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
கஞ்சாம், பூரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் உச்சக்கட்ட விழிப்புநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் கடல்நீர் புக வாய்ப்புள்ளதாகவும் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் குறித்துப் பேசிய தலைமைச் செயலாளர் அனு கார்க், “பாதிப்புக்கு ஆளாகக்கூடிய மாவட்டங்களில் இருந்து ஏறக்குறைய 80,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
“அங்கு 7,900 தங்குமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 9,100 கர்ப்பிணிகளில் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“கடற்கரைகள் மற்றும் சிலிகா ஏரியில் சுற்றுலா நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுக்குச் செயற்கைக்கோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன.
“அணைகளில் நீர்மட்டம் குறைக்கப்பட்டு வருகிறது; மேலும், நாங்கள் இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்,” என்று திருவாட்டி அனு கார்க் கூறினார்.
இதனிடையே, ஒடிசா அரசாங்கம் ஆறு மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அங்கன்வாடி நிலையங்களுக்கும் நவம்பர் 19 முதல் 21 வரை விடுமுறை அறிவித்துள்ளது.
