உ.பி. சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆனது

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு

உ.பி. சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 117 ஆனது

1 mins read
3b78b69c-c987-4b7d-be29-bad35baf2099
அலகாபாத் எனப்படும் பிரயக்ராஜ் நகர் சூறாவளிக் காற்று, மழையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விழுந்த மரங்களை இடர் நிவாரணக் குழுவினர் அகற்றுகின்றனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தின் புயல், மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 48 மணி நேரமாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை, இடி, மின்னல் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 130 கால்நடைகள் உயிரிழந்துள்ளன, 98 வீடுகள் இடிந்துள்ளன.

மாநிலத்தின் 19 மாவட்டங்கள் இந்தப் இயற்கைச் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடவும், ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கும் ஒருமுறை அறிக்கை சமர்ப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

தீவிர வானிலை மாற்றங்களைக் கண்காணிக்க, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இரண்டு புதிய முன்னறிவிப்பு அமைப்புகளைத் தொடங்கியுள்ளார்.

இதில், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பருவமழை முன்னறிவிப்பு மாதிரியும் அடங்கும். குறிப்பாக, உத்தரப் பிரதேசத்திற்காக 1 கி.மீ சுற்றளவு வரையிலான துல்லியமான மழையளவை 10 நாட்களுக்கு முன்பே கணிக்கும் திறன் கொண்ட அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து வரும் வெப்பநிலையும், வளிமண்டல மாற்றங்களுமே இத்தகைய தீவிர இடியுடன் கூடிய மழைக்குக் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர். 24 கோடி மக்கள் வசிக்கும் அந்த மாநிலத்தில், மின்னல் தாக்குதல்களால் பலர் உயிரிழக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்