திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.300 சிறப்புத் தரிசனம், ஆர்ஜித சேவைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனச் சீட்டுகள் இணையத்தில் மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
அவ்வாறு வெளியிடப்படும் சீட்டுகள் 3 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. இதனால் சிலருக்கு மட்டுமே சீட்டுகள் கிடைக்கின்றன.
பல சீட்டுகளைக் கோரி சிலர் முன்கூட்டியே முன்பதிவு செய்துவிடுவதால் இவ்வாறு நடப்பதாகச் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவுகின்றன.
இதுகுறித்துத் திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் 2.69 லட்சம் சிறப்புத் தரிசன சீட்டுகள் வெளியிடப்படுகின்றன.ஆனால், ஒரே நேரத்தில் சராசரியாக 6 லட்சம் பக்தர்கள் தலா 4 சீட்டுகள் வீதம் 24 லட்சம் சீட்டுகளுக்கு முன்பதிவு செய்ய முயற்சி செய்வதால் இணையத்தில் சிக்கல் ஏற்படுகிறது.
“இப்பிரச்சினையைச் சரிசெய்ய தேவஸ்தானம் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. பக்தர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்,” எனக் கேட்டுக்கொண்டுள்ளது.
