லக்னோ: சிறுத்தையிடம் சிக்கிக்கொண்ட தந்தையை அவரது மூன்று மகள்களும் சிறுத்தையுடன் வெறுங்கையுடன் போராடிக் காப்பாற்றியுள்ளனர். 10 நிமிடங்கள் நீடித்த இந்தப் போராட்டத்தில் சிறுத்தை கொல்லப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமான்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞான்சிங். ஊர்க்காவல் படைவீரராகப் பணியாற்றி வரும் இவருக்கு பதின்ம வயதில் மூன்று மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஞான்சிங் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள தோப்புக்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள மாமரத்தில் இருந்த சிறுத்தை ஒன்று, ஞான்சிங் மீது பாய்ந்து கடித்துக் குதறியது.
இதையடுத்து, வலி தாங்காமல் அலறிய ஞான்சிங்கின் குரலைக் கேட்டு அவரது மகள்கள் ஓடி வந்தனர்.
அந்தச் சிறுத்தையை தந்தையிடம் இருந்து விலக்கி, அதனை வெறுங்கைகளால் மூவரும் சேர்ந்து அடித்துக் கொன்றனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையின் உடலை மீட்டுச் சென்றனர்.
நடந்த சம்பவம் குறித்து கிராமவாசிகள் கூறுகையில், “மூன்று பெண் குழந்தைகளில் திஷா தைரியமாக சிறுத்தையின் கால்களைப் பின்னால் இழுத்துப் பிடித்துக்கொண்டார். அதேநேரத்தில் ரேஷு, தீப்ஷு சிறுத்தையுடன் 10 நிமிடங்கள் போராடி தந்தையைக் காப்பாற்றினர்,” என்றனர்.
இறந்த சிறுத்தை பெண் என்றும் அதற்கு மூன்று வயது இருக்கும் என்றும் வனத்துறை அதிகாரி ரஜ்னீஷ் தோமர் தெரிவித்தார். பலத்த காயமடைந்த ஞான்சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

