புதுடெல்லி: இங்கிலாந்து காற்பந்து அணியின் முன்னாள் தலைவரும் யுனிசெஃப் நல்லெண்ணத் தூதருமான டேவிட் பெக்கம், மத்தியப் பிரதேசத்தின் ஜபுவா மாவட்டத்தைச் சேர்ந்த ஹீமா நினாமாவைப் பாராட்டியுள்ளார்.
குழந்தைத் திருமணத்தை எதிர்த்து நின்றதற்காகவும் தமது கல்வியைத் தொடரும் உரிமைகளுக்காகப் போராடியதற்காகவும் அவர் ஹீமாவைப் பாராட்டியுள்ளார்.
உலகக் குழந்தைகள் தினமான நவம்பர் 20ஆம் தேதி, ஹீமாவின் கதையை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட திரு பெக்கம் அவரது துணிச்சலையும் உறுதியையும் வெகுவாகப் பாராட்டினார்.
“இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது ஹீமாவின் கதையைப் பகிர்கிறேன்.
“அவர் தமது பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் தமக்கு நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தைத் துணிச்சலுடன் தடுத்து நிறுத்தினார்.
“இப்போது அவர் தமது ஆசிரியர்களைப் போலவே தாமும் ஓர் ஆசிரியராகி, மற்ற சிறுமிகளின் எதிர்காலத்தை வடிவமைக்க உதவ வேண்டும் என்று கனவு காண்கிறார்,” என்று திரு பெக்கம் குறிப்பிட்டுள்ளார்.
“யுனிசெஃப் மற்றும் அதன் களப்பணியாளர்களின் பங்களிப்பு இல்லையெனில், இதுபோன்ற நற்செயல்கள் சாத்தியமாகி இருக்காது.
“இந்த உலகக் குழந்தைகள் தினத்திலும் எப்போதும், உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். அப்போதுதான் முன்னேற்றம் என்பது தற்செயலான ஒன்றாக இருக்காது.
“மோதல்கள், பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள், நிதி ஒதுக்கீடு குறைப்பு போன்றவை முன்னேற்றத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் சூழலில், அடுத்து என்ன நடக்கும் என்பது நாம் அனைவரும் இணைந்து எடுக்கும் முடிவுகளையே பொறுத்தது,” என்று அவர் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஹீமாவின் கதையைப் பகிர்ந்து, அதை உலகளாவிய கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காக டேவிட் பெக்கமுக்கு மத்தியப் பிரதேச மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நிர்மலா பூரியா நன்றி தெரிவித்துள்ளார்.
