சண்டிகர்: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பஞ்சாப் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி, அகவிலை நிவாரண நிலுவைத் தொகையான 14,191 கோடி ரூபாயை இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக வழங்க இயலாது என அம்மாநில அரசு கைவிரித்துவிட்டது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஹரியானா உயர் நீதிமன்றம், அரசு ஊழியர்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்திருந்தது.
இதையடுத்து, ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த பெருந்தொகையை வழங்குவது அரசியலமைப்பு ரீதியாகச் சாத்தியமற்றது என்றும் மாநிலத் தொகுப்பு நிதியத்திலிருந்து பணத்தை எடுப்பதற்கு அரசியலமைப்பு சட்டப்படியான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது என்றும் அரசு தரப்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அரசுக்கு எதிரான போராட்டத்தை அரசு ஊழியர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர். நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ஏறக்குறைய 4 லட்சம் அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகத் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, செப்டம்பர் 6ஆம் தேதி மாவட்ட அளவிலான கூட்டங்கள், செப்டம்பர் 8ல் மாநில அளவிலான போராட்டம், செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் அமைச்சர்களின் வீடுகள் முற்றுகை எனப் போராட்டத்தை தீவிரப்படுத்த ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
தவிர, செப்டம்பர் 30 அன்று சண்டிகரில் ஊழியர்கள் பங்கேற்கும் சட்டமன்றம் என்ற போராட்டத்தையும் கையிலெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிகழ்வின்மூலம் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாகக் கேள்விகளைத் தொடுக்க முடிவாகியுள்ளது.


