டெல்லி கத்திக்குத்துச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரி மரணம்

1 mins read
f7784479-5b96-43cd-8356-ca042e90445d
டெல்லி காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த கவலையை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: பணியில் இருந்த டெல்லி காவல் அதிகாரி ஒருவர், கத்திக்குத்துச் சம்பவத்தில் உயிரிழந்தார்.

தென்டெல்லியின் கோவிந்த்புரி பகுதியில் நவம்பர் 23ஆம் தேதி அதிகாலையில் கிரண்பால் என்ற அந்த அதிகாரி சுற்றுக்காவல் பணியில் இருந்தபோது தாக்கப்பட்டார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையில் 42 வயதுடைய அந்த அதிகாரியை, பல மர்ம நபர்கள் கூரான ஆயுதங்களுடன் தாக்கியதாகத் தெரியவந்துள்ளது.

கிரண்பால் தம்மைத் தற்காத்துக் கொள்ள முயன்றும் தாக்குதல்காரர்களால் வயிறு, மார்புப் பகுதிகளில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாகச் சம்பவத்தை நேரில் கண்டோர் கூறினர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த காவல் அதிகாரியைக் கண்ட பொதுமக்கள், காவல் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கிரண்பால், வழியிலேயே மாண்டுவிட்டார் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பாக விசாரித்துக் குற்றவாளிகளைக் கைதுசெய்ய, டெல்லி காவல்துறை பல்வேறு குழுக்களை அமைத்துள்ளது.

சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி பதிவுகள் தற்போது பார்வையிடப்பட்டு வருகின்றன. மேலும், சந்தேக நபர்கள் பலர் விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

டெல்லி காவல்துறையில் கிரண்பால் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி உள்ளார் என்றும் கடமையுணர்வுமிக்கவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், டெல்லி காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு குறித்த ஆழ்ந்த கவலையை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்