புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநரும் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் காம்பீருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டெல்லி ராஜிந்திர் நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின்படி, காம்பீருக்கு இரு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாக அறியப்படுகிறது.
அதன் தொடர்பில் விசாரணை நடத்திவருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
‘ஜிமெயில்’ மின்னஞ்சல் மூலமாக இம்மாதம் 22ஆம் தேதி அம்மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.
அதே நாளில் காஷ்மீரில் 26 பேரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
காம்பீருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது இது முதன்முறையன்று. கடந்த 2022ஆம் ஆண்டிலும் அவருக்கு இதுபோன்ற மிரட்டல்கள் வந்ததையடுத்து, அவருக்கான பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தினர்.