புதுடெல்லி: ஆஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
பிரதமர் மோடி ஜூலை 6 முதல் 11ஆம் தேதி வரை இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
முதலில் இந்தோனீசியா செல்லும் அவர், அங்குச் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் ஜூலை 8ஆம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறார்.
ஆஸ்திரேலியாவில் அந்நாட்டுப் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தும் அவர், 9ஆம் தேதி மெல்பர்ன் நகரில் உள்ள மார்வெல் அரங்கில் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி தொடர்பாக ‘ஆஸ்திரேலியா இந்தியா ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பு சமூக ஊடகங்களில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றைப் பதிவிட்டிருந்தது. அதற்கு அபுமுஸ்தபா என்பவர் பின்னூட்டமிட்டுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியின்போது மார்வெல் அரங்கத்தின் மேற்கூரையை மூடுவது நல்லது என்றும் இல்லையெனில் பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவில் மரணத்தை எதிர்கொள்வார் என்றும் அபுமுஸ்தபா குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கொலை மிரட்டலையடுத்து ஆஸ்திரேலியக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அபுமுஸ்தபா எங்கிருந்து மிரட்டல் விடுத்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

