ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத் தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மாண்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் இரண்டாவது நாளாக ஜூலை 1ஆம் தேதியும் நீடித்தது.
சங்கரெட்டி மாவட்டத்திலுள்ள தொழிற்சாலையில் இருந்த உலை ஒன்று கடந்த ஜூன் 30ஆம் தேதி திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
அப்போது அந்த ஆலையில் 150 ஊழியர்கள் பணியில் இருந்தனர். வெடிச்சத்தம் கேட்டதும் கடும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பதறியடித்து ஓட்டம்பிடித்தனர். எனினும் அவர்களில் பலர் விபத்தில் சிக்க நேரிட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு, மீட்புப் படையினரும் கடும் போராட்டத்துக்குப் பின்னர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதலில் 10 பேர் பலியானதாகத் தகவல் வெளியான நிலையில், ஜூலை 1ஆம் தேதி மாலை அந்த எண்ணிக்கை 37ஆக அதிகரித்தது. விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.