புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிரான பதவிநீக்கத் தீர்மானம்மீது மார்ச் 9ஆம் தேதி மக்களவையில் விவாதம் நடைபெற உள்ளது.
அன்றைய நாள் அவர் அவையை வழிநடத்தமாட்டார் எனவும் அதற்குப் பதிலாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் வரிசையில் அமர்ந்து தமக்கு எதிரான தீர்மானத்தின்மீது நடைபெறும் விவாதத்தைக் கவனிப்பார் எனவும் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு 9ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாளே பல்வேறு முக்கியமான பிரச்சினைகள் குறித்து குரலெழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
வரவுசெலவுத் திட்டக்கூட்டத்தொடரின் முதல் அமர்வின்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுவதற்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, எட்டு எம்பிக்கள் அவை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், எதிர்க்கட்சி பெண் உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை அவமரியாதை செய்யும் வகையில் நடந்துகொள்ளத் திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா வெளிப்படையாகவே அறிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக பதவிநீக்கத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி நோட்டீசும் அளித்துள்ளது.
இதற்காக மக்களவைச் செயலாளரிடம் வழங்கப்பட்டுள்ள நோட்டீசில் 118 எதிர்க்கட்சி எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வின் முதல் நாளான 9ஆம் தேதியே சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது விவாதம் நடத்த வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
விவாதத்துக்குப் பின்னர் பெரும்பாலான எம்பிக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே சபாநாயகரை பதவியிலிருந்து நீக்க முடியும் என்றும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் மக்களவையில் விவாதத்திற்கு வரும்போது அவையில் உள்ள எம்பிக்களில் குறைந்தபட்சம் 50 பேர் எழுந்து நின்று அவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

